ஆப்கானிஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த சிறுவன் மீட்கப்பட்ட பின்னர் உயிரிழப்பு

by Staff Writer 18-02-2022 | 7:18 PM
Colombo (News 1st) ஆப்கானிஸ்தானில் ஆழ்துளை கிணற்றினுள் வீழ்ந்து நான்கு நாட்களின் பின்னர் மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழந்துள்ளார். Zabul மாகாணத்திலுள்ள கிணறொன்றில் 04 நாட்களுக்கு முன்னர் வீழ்ந்த Haider எனப்படும் 6 வயதான சிறுவன் இன்று பிற்பகல் வேளையில் மீட்கப்பட்டிருந்தார். இதன்போது, அவர் சுவாசிக்கவில்லை எனவும் அசைவின்றி இருந்ததாகவும் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். மீட்புப்பணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட நிலையில், சிறுவன் வீழ்ந்திருந்த கிணற்றினுள் இருந்து நேற்று முதல் எவ்வித சத்தமும் கேட்கவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், சிறுவன் மீட்கப்பட்டவுடன் மருத்துவ குழுவினால் ஒக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது. இதன்போது சிறுவன் சுவாசித்த போதிலும் தலைநகர் காபூலில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்புவதற்காக ஹெலிகொப்டருக்குள் கொண்டு செல்லப்பட்ட போது அவரது உயிர் பிரிந்துவிட்டதாக Zabul மாகாண பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ஸபியுல்லா ஜவ்ஹர் (Zabiullah Jawhar) தெரிவித்துள்ளார்.