அரசியல் ஆவணம் 21 ஆம் திகதி இறுதி வடிவம் பெறும்

மலையக மக்களின் அரசியல் ஆவணம் 21 ஆம் திகதி இறுதி வடிவம் பெறும்: மனோ கணேசன் அறிக்கை

by Staff Writer 18-02-2022 | 8:31 PM
Colombo (News 1st) இந்திய வம்சாவளி மலையக மக்களின் அரசியல் ஆவணம் எதிர்வரும் 21 ஆம் திகதி கொழும்பில் இறுதி வடிவம் பெறும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். கண்டி சமூக அபிவிருத்தி மன்றம், சமூக செயற்பாட்டாளர் கௌதமன் பாலச்சந்திரனின் ஏற்பாட்டில் இந்திய வம்சாவளி மலையக மக்களின் அரசியல் ஆவணம் தயாரிக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட கட்சித் தலைவர்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகக் கட்சிகளின் தலைவர்கள், பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச நாட்டு அரசுகள், சர்வதேச நிறுவனங்களுக்கும் இந்த ஆவணத்தை சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய அரசியல் அமைப்பை தயாரிக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டு வரும் நிலையில், மலையக மக்கள் தொடர்பாக விரிவுபடுத்தப்பட்ட நிலைப்பாட்டு கோரிக்கைகளை அரசுக்கு அறிவித்து, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உத்தேசித்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பில் இலங்கை அரசுடன், இந்திய அரசுக்கும் காணப்படுகின்ற கடப்பாடுகள் நல்லெண்ண அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய மகாராணியாரின் அரசாங்கத்திற்கும் மலைய மக்கள் தொடர்பில் காணப்படும் பெரும் கடட்பாட்டை எடுத்துக்கூறி, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது அறிக்கையினூடாக சுட்டிக்காட்டியுள்ளார்.