by Staff Writer 15-02-2022 | 7:03 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் COVID பெருந்தொற்று தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில், யாழ். மாவட்டத்தில் கடந்த 48 மணித்தியாலங்களில் டெங்கு தாக்கத்தினால் இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
யாழ். மாவட்டத்தில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஆர். கேதீஸ்வரன் குறிப்பிட்டார்.
இதற்கமைய, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில யாழ்ப்பாணத்தில் 360 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இரண்டு மரணங்களும் பதிவாகியுள்ளன.
கடந்த 48 மணித்தியாலங்களில் 10 வயது சிறுவனும்18 வயது யுவதியும் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளனர்.
யாழ். கொடிகாமத்தை சேர்ந்த 10 வயதான வ.அஜய் கடந்த வாரம் டெங்கு காய்ச்சலினால் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ். மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி பயின்ற சிறுவனே டெங்குத் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார்.
அஜயின் இறுதிக்கிரியைகள் கொடிகாமம் பொது மயானத்தில் நேற்று (14) மாலை இடம்பெற்றன.