சமுதித்த சமரவிக்ரம வீட்டில் தாக்குதல்: இதுவரை 21 பேரிடம் வாக்குமூலம் பதிவு

by Staff Writer 15-02-2022 | 8:23 PM
Colombo (News 1st) சுதந்திர ஊடகவியலாளரான சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் 21 பேரிடம் இதுவரை வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கல்கிசைக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மேலும் சில பொலிஸ் அத்தியட்சகர்களின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார். தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர்கள் பயணித்த வாகனத்தை கண்டுபிடிப்பதற்காக 60 பொலிஸ் உத்தியோகத்தர்களை பயன்படுத்தி, பிலியந்தலை பகுதியில் வீதிகளில் பொருத்தப்பட்டுள்ள CCTV காணொளிகளை சோதனைக்குட்படுத்தியுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார். ஆயுதமேந்திய குழுவினரால் நேற்று (14) அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.​ சுதந்திர ஊடகவியலாளரான சமுதித்த சமரவிக்ரம வசிக்கும் பிலியந்தலை கேம்பிரிட்ஜ் கோர்ட் தொடர்மாடி வீட்டிற்கு நேற்று அதிகாலை சென்று ஆயுதமேந்திய நான்கு பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். வௌ்ளை நிற வேனில் சென்றவர்கள் பிரதான நுழைவாயிலை பலவந்தமாக திறந்து, அங்கிருந்த காவலாளியை அச்சுறுத்திய பின்னர் தொடர்மாடி குடியிருப்பிற்குள் சென்றுள்ளனர். பின்னர் ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின் மீது கற்கலால் தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், வீட்டிற்கு பாரிய சேதமேற்படுத்தியுள்ளனர்.