by Staff Writer 14-02-2022 | 3:03 PM
Colombo (News 1st) ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின் மீது அடையாளம் தெரியாதவர்களினால் இன்று (14) அதிகாலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிலியந்தலை - கேம்பிரிஜ் கோர்ட் அடுக்குமாடியில் வசிக்கும் சமுதித்தவின் வீட்டின் மீது வௌ்ளை வேனில் வந்த நால்வர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
குடியிருப்பின் பிரதான நுழைவாயிலை வலுக்கட்டாயமாக திறந்து அங்கிருந்த பாதுகாப்பு கடமையிலிருந்த ஊழியரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதன் பின்னரே ஊடகவியலாளரின் வீட்டிற்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்வாறு தொடர்மாடி தொகுதிக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின் மீது கற்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே, ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரம மீதான தாக்குதல் சம்பவத்திற்கு இலங்கை ஊடகவியலாளர் சங்கம் கண்டனம் வௌியளிட்டுள்ளது.
தாக்குதல்களை நடத்தி ஊடகவியலாளர்களை மௌனமாக்குவதற்கு எந்தவொரு குழுவும் முற்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதுடன் ஊடகங்கள் மீதான இத்தகைய முறையற்ற அடக்குமுறைகளைத் தடுக்க வேண்டும் என சங்கம் குறிப்பிட்டுள்ளது.