மீண்டும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா?

மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா - பொது பயன்பாடுகள் ஆணைக்குழு விளக்கம்

by Staff Writer 13-02-2022 | 5:37 PM
Colombo (News 1st) நீர்த்தேக்கங்கள் சிலவற்றில் காணப்படும் நீர், மேலும் இரு வாரங்கள் அல்லது ஒரு மாதத்திற்கு தேவையான மின்சார உற்பத்திக்கு மாத்திரமே போதுமானதென பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சாரத்தை துண்டிக்காமல் தடையின்றி மின்சாரத்தை எவ்வாறு விநியோகிப்பது என்பது தொடர்பில் நேற்றைய தினம் (12) பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார். இந்த கலந்துரையாடலில் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை, லெக்கோ நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. மின்சாரத்தை சிக்கனமாக பாவனைக்கு உட்படுத்தாவிடின் எதிர்காலத்தில் மின்வெட்டை அமுல்படுத்தவேண்டியேற்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க மேலும் தெரிவித்தார். இந்நிலையில், வர்த்தக நிலையங்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்தை குறைத்து பொதுமக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார். தனியார் நிறுவனங்கள் மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்தி மின்சார தேவையை பூர்த்திசெய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையத்தின் மின்னுற்பத்தி முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி ரோஹாந்த அபேசேகர தெரிவித்தார். எனவே, தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்துமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.