மானிய விலையில் கோதுமை மா இதுவரை கிடைக்கவில்லை: தோட்டத் தொழிலாளர்கள் அங்கலாய்ப்பு

by Staff Writer 11-02-2022 | 8:12 PM
Colombo (News 1st) மானிய விலையில் கோதுமை மா வழங்குவதாக தெரிவித்து சம்பளத்தில் பணம் அறவிடப்பட்டாலும் இதுவரை கோதுமை மா கிடைக்கவில்லை என பசறை - கோணக்கலை மேற்பிரிவு தோட்ட மக்கள் தெரிவித்தனர். கோதுமை மா விலையேற்றத்தைத் தொடர்ந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 80 ரூபாவிற்கு ஒரு கிலோகிராம் கோதுமை மா வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது. ஐம்பதிற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் ஜனவரி மாத சம்பளத்தில் இருந்து மானிய விலையில் கோதுமை மாவை வழங்குவதற்காக பணம் அறிவிடப்பட்டுள்ளதாக கோணக்கலை மேற்பிரிவு தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர். தோட்ட நிர்வாகத்தினால் 80 ரூபா என்ற ரீதியில் 15 கிலோகிராமிற்கு 1200 ரூபா பணம் சம்பளத்தில் இருந்து அறவிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். எனினும், இதுவரை தமக்கு எங்கும் மானிய விலையில் கோதுமை மாவை பெற்றுக்கொள்ள முடியவில்லையென மக்கள் விசனம் தெரிவித்தனர். இதேவேளை, மானிய விலையில் கோதுமை மாவை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கான உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்பட்டது. நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, தோட்ட வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் கோதுமை மா நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்