பொலிஸாருடன் பரஸ்பர துப்பாக்கிச்சூடு: போதைப்பொருள் கடத்தல்காரர் அபா உயிரிழப்பு

by Bella Dalima 11-02-2022 | 3:20 PM
Colombo (News 1st) மொறட்டுவை - எகொட உயன பகுதியில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச்சூட்டில் போதைப்பொருள் கடத்தல்காரர் 'அபா' உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஹெரோயின் உள்ளதாக கிடைத்த தகவலுக்கமைவாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் நேற்றிரவு 10 மணியளவில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, வீட்டிலிருந்த ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் துபாயிலுள்ள போதைப்பொருள் கடத்தற்காரர் ஒருவரின் உதவியாளரான 27 வயதான அபா எனும் நபர் உயிரிழந்துள்ளார். இதன்போது, பொலிஸ் விசேட அதிரடிப்படை உறுப்பினர் ஒருவருக்கும் காயமேற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் குறித்த சந்தர்ப்பத்தில் இருந்த 06 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.