COPE, COPA குழுக்களின் தலைவர்கள் மீண்டும் தெரிவு

COPE, COPA குழுக்களின் தலைவர்கள் மீண்டும் தெரிவு

by Staff Writer 10-02-2022 | 5:35 PM
Colombo (News 1st) COPE குழுவின் தலைவராக பேராசிரியர் சரித்த ஹேரத் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாராளுமன்ற வளாகத்தில் இன்று (10) கூடிய COPE குழுவில் அமைச்சர் கலாநிதி சரத் வீரசேகர பேராசிரியர் சரித்த ஹேரத்தின் பெயரை முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த அதனை வழிமொழிந்தார். பாராளுமன்றத்தின் 120 (1) நிலையியல் கட்டளைக்கு அமைய இந்த குழுவிற்கான உறுப்பினர்கள் அண்மையில் தெரிவுக்குழுவினால் நியமிக்கப்பட்டனர். இந்த குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், S.M. மரிக்கார், இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும் உள்ளடங்கியுள்ளனர். இதேவேளை, COPA எனப்படும் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக அநுர பிரியதர்ஷன யாப்பா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கூடிய COPA குழுக்கூட்டத்தில் 2011 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்திற்கான திருத்தத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கமைய, யாராவது ஒரு நபரினால் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தின் கணக்கிற்கு மேலதிகமாக செலுத்தப்பட்ட அல்லது பிழையாகச் செலுத்தப்பட்ட ஏதேனும் முத்திரைத் தீர்வையை மீள வழங்குவதற்காக ஏற்பாடு செய்வது இந்தத் திருத்தத்தின் சட்டப்பயன் என பாராளுமன்ற ஊடகப்பிரிவு கூறியுள்ளது. அத்துடன், 2008ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க செயல் நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையத்திற்கான அபிவிருத்தித் திட்டத்திற்கு வரி விலக்கு வழங்குவது குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கும் இக்கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இதன் ஊடாக, குறிப்பிட்ட திட்டத்திற்கு 25 வருட காலத்திற்கு வரி விலக்களிக்கப்படுவதுடன், பெறுமதி சேர் வரி, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி, செஸ் வரி மற்றும் சுங்கத் தீர்வை என்பன 05 வருடங்களுக்கு விலக்களிக்கப்படுகின்றன. இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, இந்த வரி விலக்கானது பொருளாதார பின்னடைவுகளைச் சந்தித்துள்ள நாட்டிற்கு எந்தளவிற்கு பொருத்தமாக அமையும் என கேள்வியெழுப்பியுள்ளார். தற்போதைய சூழலில் ஏனைய நாடுகளுடன் போட்டியிடும் வகையில் இவ்வாறான வரிச்சலுகைகளை வழங்குவது அவசியமானது என இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.