மன்னாரில் படகுகள் ஏலத்திற்கு என்ன நடந்தது?

by Staff Writer 10-02-2022 | 2:26 PM
Colombo (News 1st) இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த போது பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் நான்காவது நாளாக இன்றும் (10) ஏலத்தில் விடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஏல விற்பனை இடம்பெறவில்லை. மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் பியர் இறங்குதுறையில் இன்றைய தினம் (10) ஏல விற்பனை இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மன்னார் மற்றும் வௌி மாவட்டங்களிலிருந்து சுமார் 30 இற்கும் மேற்பட்ட கொள்வனவாளர்கள் வந்திருந்தனர்.   இந்த விடயம் தொடர்பில் கடற்றொழில் திணைக்களத்தின் மன்னார் மாவட்ட உதவிப் பணிப்பாளர் சரத் சந்திரநாயக்கவிடம் வினவிய போது, 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் கைப்பற்றப்பட்ட 08 படகுகளே கடலில் தரித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இயற்கை அனர்த்தங்களில் சிக்கி கடலில் மூழ்கியுள்ளதாக தெரிவித்தார். இதேவேளை, கடந்த 03 நாட்களாக இடம்பெற்ற ஏல விற்பனையில் 148 படகுகள் ஏலம் விடப்பட்டுள்ளதுடன் 57 இலட்சத்து 46 ஆயிரத்து 300 ரூபாவிற்கு இந்தப் படகுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே, கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 9 பேர் இன்று (10) சென்னையை சென்றடைந்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம், புதுக்கோட்டையை சேர்ந்த 55 மீனவர்கள் கடந்த 25 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இயக்கச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 48 பேர் நேற்று (09) மிரிஹாைன முகாமிற்கு அழைத்துவரப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க, நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்திருந்தார். இவர்களில் 9 பேர் பின்னர் குடிவரவு மற்றும் குடியகல்வு மத்திய நிலையத்தினூடாக இன்று (10) காலை சென்னை விமான நிலையத்தை சென்றடைந்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. இதேவேளை, இராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று (09) ஆரம்பித்த காலவரையறை அற்ற போராட்டம் இரண்டாவது நாளாகவும் இன்றும் தொடர்கின்றது. அத்துடன், மீனவர் போராட்டத்தால் ஒரு நாளைக்கு 10 கோடி ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமது கோரிக்கைகளை வலியுறுத்தி நாளைய தினம் (11) இராமேஸ்வரத்தில் ரயில் மறியல் போராட்டம் மேற்கொள்ளப்படும் என மீனவ சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.