இந்திய மீனவர் படகுகளை ஏலம் விடும் நடவடிக்கை நிறுத்தம்; காத்திருந்த கொள்வனவாளர்களுக்கு ஏமாற்றம்

by Staff Writer 10-02-2022 | 7:55 PM
Colombo (News 1st) இந்திய மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு தலைமன்னாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 படகுகள் இன்று ஏலத்தில் விடப்படவுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இன்று அந்த படகுகள் ஏலத்தில் விடப்படவில்லை. இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த போது பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் நான்காவது நாளாக இன்றும் ஏலத்தில் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய, தலைமன்னாரில் இந்திய மீனவர்களின் படகுகளை கொள்வனவு செய்வதற்காக மன்னார் மற்றும் வௌி மாவட்டங்களை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கொள்வனவாளர்கள் கூடியிருந்தனர். மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் பியர் இறங்குதுறையில் இன்றைய தினம் ஏல விற்பனை இடம்பெறுவதாக ஏற்கனவே அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. எனினும், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் கொள்வனவாளர்களுக்கு எவ்வித தகவல்களையும் வழங்காமலேயே அங்கிருந்து திரும்பிச் சென்றதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் கடற்றொழில் திணைக்களத்தின் மன்னார் மாவட்ட உதவி பணிப்பாளர் சரத் சந்திரநாயக்கவிடம் வினவியபோது, 2015 , 2016 ஆம் ஆண்டு கைப்பற்றபட்ட 8 படகுகளே கடலில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் இயற்கை அனர்த்தங்களில் சிக்கி அந்த படகுகள் தற்போது கடலில் மூழ்கியுள்ளதால், ஏல விற்பனையை நடத்த முடியாமற்போனதாகவும் தெரிவித்தார். கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் இன்று இவ்வாறு கூறினாலும் தலைமன்னாரில் இந்திய மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 8 படகுகள் உள்ளதாகவும் இதற்கான ஏல விற்பனை இன்று நடைபெறவுள்ளதாகவும் கடற்றொழில் திணைக்களம் ஏற்கனவே விளம்பரங்களை பிரசுரித்திருந்தது. தமிழக அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் படகுகள் ஏலத்தில் விடப்படுவதை தடுத்து நிறுத்துமாறு இந்திய மத்திய அரசாங்கத்திடமும் இலங்கை அரசாங்கத்திடமும் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக 148 படகுகள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. இந்தப் படகுகள் 57,46,300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை, வட பகுதி மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிப்பதை தவிர்க்குமாறு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் கோரியதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்தது. இலங்கை மீனவர்களுக்கும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் இடையில் காணப்படும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முயற்சிக்காமல் தாதமப்படுத்துவதினூடாக இரு தரப்பிற்கும் இடையில் முரண்பாட்டை அரசாங்கம் ஏற்படுத்துவதாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தெரிவித்தது. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 9 பேர் இன்று விமானம் மூலம் சென்னையை சென்றடைந்ததாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம், புதுக்கோட்டை சேர்ந்த 55 மீனவர்கள் கடந்த 25 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர். இலங்கையில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்யுமாறு இராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று ஆரம்பித்த காலவரையற்ற போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது .