by Staff Writer 09-02-2022 | 7:24 PM
Colombo (News 1st) COVID பரிசோதனை தொகுதிகளுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியமான சந்தர்ப்பங்களில் மாத்திரம் பரிசோதித்துக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கையில் COVID தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையிலேயே சுகாதார அமைச்சு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
சுகாதார அமைச்சின் புள்ளி விபரங்களுக்கு அமைய, நாட்டிலுள்ள வைத்தியசாலைகள், வீடுகளில் கிசிச்சை பெற்று வருகின்ற COVID நோயாளர்களின் எண்ணிக்கை நேற்று 24, 265 ஆக அமைந்திருந்தது.
இவர்களில் 62 பேர் தீவிர கண்காணிப்புப் பிரிவுகளில் சிகிச்சைபெற்று வருவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
சிகிச்சை நிலையங்களில் உள்ள 6,906 கட்டில்களை COVID நோயாளர்கள் பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
நூற்றுக்கும் மேற்பட்ட COVID நோயாளர்கள் தமது சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வருவதாக தேசிய தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
COVID தொற்றுக்குள்ளான 120 சிறுவர்கள் சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கிசிச்சை பெற்று வருகின்றனர்.
நாளாந்தம் COVID தொற்றுக்குள்ளான 20 தொடக்கம் 30 சிறுவர்கள் பதிவாவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஜி.விஜேசூரிய தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் தரவுகளுக்கு அமைய, கடந்த மூன்று நாட்களாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 1,207 ஆக குறைவடைந்துள்ளது.
கடந்த 7 ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில், நேற்று முன்னெடுக்கப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 316 ஆல் குறைவடைந்துள்ளது.
COVID தொற்றுக்குள்ளாவோரை அடையாளம் காண்பதற்காக அரசாங்கத்தினால் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட கெம்பல் பார்க் உள்ளிட்ட சில இடங்களில் இன்று பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவில்லை.
சுமார் 60,000 அன்டிஜன் பரிசோதனை தொகுதிகள் தற்போது எஞ்சியுள்ளதாக மருத்துவ விநியோகப் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் டி.ஆர்.கே.ஹேரத் கூறினார்.
இன்று பிற்பகல் வேளையில் மேலும் ஒரு இலட்சம் பரிசோதனை தொகுதிகள் கிடைக்கவேண்டியிருந்ததாகவும் அவர் கூறினார்.