ஹிஜாஸ் ஹிஸ்புல்லா பிணையில் விடுவிப்பு

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா பிணையில் விடுவிப்பு

எழுத்தாளர் Staff Writer

09 Feb, 2022 | 4:08 pm

Colombo (News 1st) மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய பிணை உத்தரவிற்கமைய சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா இன்று புத்தளம் மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஒரு இலட்சம் ரூபா ரொக்கப்பிணை மற்றும் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்திற்கு சென்று கையொப்பமிட வேண்டுமென மேல் நீதிமன்ற நீதிபதி மாலினி அபேரத்ன உத்தரவிட்டுள்ளார்.

பயங்கவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு பிணை வழங்கி மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் கட்டளையை புத்தளம் மேல் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

புத்தளம் பகுதியிலுள்ள மதரசா ஒன்றில் மாணவர்களுக்கு அடிப்படைவாதத்தை கற்பித்தமை தொடர்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கைது செய்யப்பட்டார்.

18 மாதங்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக சட்ட மாஅதிபரால் , பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் புத்தளம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிணை வழங்குமாறு கோரி, இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட போதிலும் , மேல் நீதிமன்றம் அவற்றை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்கான அதிகாரம் மேல் நீதிமன்றத்திற்கு கிடையாது என அறிவித்து, குறித்த பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இதற்கு எதிராக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்