11 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்; கைப்பற்றப்பட்ட படகுகள் ஏலம்

11 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்; கைப்பற்றப்பட்ட படகுகள் ஏலம்

எழுத்தாளர் Staff Writer

08 Feb, 2022 | 9:10 pm

Colombo (News 1st) Sea of Sri Lanka எனும் இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அட்டூழியம் தொடர்கிறது.

மீனவர்களின் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் சேதம் ஏற்படுத்தி, கடல் வளத்தை சூறையாடும் இந்திய மீனவர்களை தடுக்கக் கோரி கடற்றொழில் அமைச்சுக்கு முன்பாக இன்று (08) போராட்டம் நடத்தப்பட்டது.

இதனிடையே யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த மேலும் 11 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்தபோது கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் , நீதவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் இன்று பகல் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, எதிர்வரும் 22 ஆம் திகதி வரை மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட மீனவர்களில் இருவரின் கைகளில் காயங்கள் காணப்பட்டதாகவும், சிறைச்சாலை வைத்தியசாலையில் அதற்கான சிகிச்சையை வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டதாகவும் அவர் கூறினார்.

படகிலிருந்த இழுவை மடி வலைகளை அறுப்பதற்கு முயற்சித்த போது, தங்கூசி நூல் காரணமாக கைகளில் காயம் ஏற்பட்டதை மீனவர்கள் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதாகவும் கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட பணிப்பாளர் தெரிவித்தார்.

இந்த மீனவர்களின் மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கடந்த முதலாம் திகதி இலங்கை மீனவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 21 பேரினதும் விளக்கமறியலை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் நேற்று நீடித்து உத்தரவிட்டது.

இந்த 21 இந்திய மீனவர்களில் ஒருவருக்கு ஏற்கனவே COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டு, இயக்கச்சி COVID-19 சிகிச்சை முகாமில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம், புதுக்கோட்டையை சேர்ந்த 55 மீனவர்கள் கடந்த 25 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர்.

இவர்களில் 48 மீனவர்களுக்கு COVID தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையால் , அவர்கள் இயக்கச்சி முகாமிற்கு அனுப்பப்பட்டிருந்ததாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் காலம் நிறைவுற்ற நிலையில், இந்தியாவிற்கு அனுப்பி வைப்பதற்காக அவர்கள் நாளை மிரிஹானையிலுள்ள குடிவரவு குடியகல்வு மத்திய நிலையத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் அறிவித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பில் கைப்பற்றப்பட்டு, அரசுடைமையாக்கப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகள் இன்று இரண்டாவது நாளாகவும் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன

காங்கேசன்துறை கடற்படைத்தளத்தில் இந்திய மீனவர்களின் 05 படகுகள் இன்று ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.

ஏலத்தில் 43 கொள்வனவாளர்கள் பங்கேற்றதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.

படகுகள் 50,000 ரூபா முதல் 1,50,000 ரூபா வரை ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன.

இந்திய மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விடும் இலங்கை அரசின் முயற்சிகளை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக மீனவர்களுக்கு சொந்தமான மீன்பிடிப் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் நடவடிக்கை சட்டத்திற்கு புறம்பானது என அவர் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டிற்கு முன்னர் சிறைபிடிக்கப்பட்ட 125 பழுதுபார்க்க இயலாத நிலையில் உள்ள தமிழக படகுகள் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்பார்வையிட அதிகாரிகள் மற்றும் மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்களின் உத்தேச பயணத்திற்கு இலங்கை வெளியுறவு அமைச்சின் ஒப்புதலை பெறுமாறும் பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்