தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதோர் தொடர்பான விபரம்

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதோர் தொடர்பான விபரம் 

by Staff Writer 08-02-2022 | 9:58 AM
Colombo (News 1st) நாட்டில் 20 வயதுக்கு மேற்பட்ட 11 இலட்சத்து 70 ஆயிரம் பேர் இதுவரை எந்தவொரு கொவிட் தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளவில்லை என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக முன்னெடுக்கப்பட்ட மதிப்பீட்டில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எம்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்துள்ளார். 20 தொடக்கம் 29 வயதுக்கிடைப்பட்டவர்களில் 719,000 பேர் இதுவரை எந்தவொரு கொவிட் தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளவில்லை என அவர் கூறியுள்ளார். அத்துடன், 30 தொடக்கம் 60 வயதுக்கிடைப்பட்டவர்களில் 03 இலட்சத்து 86 ஆயிரத்து 408 பேர் இதுவரை தடுப்பூசி பெற்றுக் கொள்ளவில்லை என்பதும் தெரியவந்துள்ளதாக எம்.எச்.எம். சித்ரானந்த குறிப்பிட்டுள்ளார். 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 64,234 பேர் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது. அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் கொவிட் தடுப்பூசியேற்றல் வேலைத்திட்டம், கிராமிய மட்டத்திலும் செயற்படுத்தப்பட்டுவரும் நிலையில் சிலர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதிருப்பது கவலைக்குரிய விடயமென உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எம்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்துள்ளார். இவ்வாறானவர்களுக்கு தடுப்பூசி தொடர்பில் தௌிவூட்டி அவர்களுக்கான தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கிராம உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் மேலும் கூறியுள்ளார்.