எழுத்தாணை மனு மீதான தீர்மானம் விரைவில்

எரிவாயு நிறுவனங்களுக்கு எதிரான எழுத்தாணை மனு தொடர்பான தீர்மானம் விரைவில்

by Staff Writer 08-02-2022 | 6:25 PM
Colombo (News 1st) அபாயகரமான எரிவாயு சிலிண்டர்களை விநியோகித்தமை தொடர்பில் Litro மற்றும் Laugfs எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்தாணை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கான அறிவித்தலை அனுப்புவதா, இல்லையா என்பது தொடர்பான தீர்மானத்தை எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி அறிவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. மனு தொடர்பில் மனுதாரர்கள் மற்றும் பிரதிவாதிகளால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை ஆட்சேபனைகளை ஆராய்ந்ததன் பின்னரே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கலாநிதி ருவன் பெர்னாண்டோ மற்றும் சம்பத் விஜயரத்ன ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அபாயகரமான எரிவாயு சிலிண்டர்களை விநியோகித்தமை தொடர்பில் குறித்த எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி இந்த எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பதால் ஏற்படும் சொத்துக்கள் மற்றும் உயிர் சேதங்களுக்கு நட்ட ஈட்டை வழங்கும் வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதாகவும் மனு தொடர்பில் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு அமைய அனைத்து சந்தர்ப்பங்களிலும் நடவடிக்கையை எடுப்பதாகவும் சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகிய அரச சிரேஷ்ட சட்டத்தரணி மனோஹர ஜயசிங்க மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பதால் ஏற்படும் சேதங்கள் தொடர்பில் முறைப்பாடு கிடைத்தவுடன், பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவித்த அரச சிரேஷ்ட சட்டத்தரணி, அனைத்து செயற்பாடுகளின் போதும் நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதால், மனுவினூடாக கோரப்பட்டுள்ள நிவாரணங்கள் தற்போதும் நடைமுறையிலுள்ளதாக கூறியுள்ளார். நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் எந்தவொரு கட்டளைகளுக்கு அமைவாகவும் செயற்பட தயாராகவுள்ளதாக Laugfs எரிவாயு நிறுவனம் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இதனபோது தெரிவித்துள்ளார். மனு தொடர்பில் அறிவித்தல் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என லிட்ரோ (Litro) நிறுவனம் சார்பில் மன்றில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.