சுகாதார அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி; பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது 

சுகாதார அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி; பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது 

எழுத்தாளர் Staff Writer

08 Feb, 2022 | 4:56 pm

Colombo (News 1st) சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவுடனான கலந்துரையாடல் தோல்வியடைந்துள்ளதாகவும் பணிப்பகிஷ்கரிப்பை தொடர்ந்தும் முன்னெடுப்பதாகவும் சுகாதார தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கத்தினரால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

சம்பள முரண்பாடு, பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

17 சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சுகாதார ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, கொழும்பு , கண்டி தேசிய வைத்தியசாலைகளிலும் 24 போதனா வைத்தியசாலைகளிலும் 26 பொது வைத்தியசாலைகளிலும் 46 ஆதார வைத்தியசாலைகளிலும் 410 மாவட்ட வைத்தியசாலைகளிலும் 293 சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்களிலும் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, வௌிநோயாளர் பிரிவுகளில் மருந்து விநியோகம், தாதியர் சேவை, ஆய்வுக்கூட பரிசோதனை, மாதாந்த சிகிச்சை, கதிரியக்க சேவை உள்ளிட்ட பல சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

பொது சுகாதார பரிசோதகர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால், டெங்கு ஒழிப்பு நடவடிக்கை, கொரோனா ஒழிப்பு செயற்பாடுகள், குடும்பநல சுகாதார சேவைகள் உள்ளிட்ட செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

சுகாதார ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில், சுகாதார அமைச்சுக்கு முன்பாக உள்ள டீன்ஸ் வீதியில், சுகாதார ஊழியர்கள் இன்று முற்பகல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கத்தினர், கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவிலிருந்து எதிர்ப்பு பேரணியை முன்னெடுத்தனர். அங்கிருந்து சுகாதார அமைச்சு வரை பேரணி முன்னெடுக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்