இலங்கை மின்சார சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மின்சார சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு

by Staff Writer 05-02-2022 | 4:04 PM
Colombo (News 1st) அனுமதியின்றி மின் விநியோகம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை மின்சார சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சார சட்டம் மற்றும் பொது பயன்பாட்டுச் சட்டத்தின்படி இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்தார். மின்சார விநியோகத்தை துண்டிப்பதாக இருந்தால், பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி பெற வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்நிலையில், 02 நாட்களுக்கு முன்னர் தமது ஆணைக்குழுவிடம் அனுமதி பெறப்படாமல் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க சுட்டிக்காட்டினார். இலங்கை மின்சார சபையின் இந்த நடவடிக்கையினால் நாட்டு மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். எனவே, மின்சார சட்டம் மற்றும் பொது பயன்பாட்டு சட்டத்தை மீறி செயற்பட்டமை தொடர்பில் இலங்கை மின்சார சபைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டார். இதனிடையே, நேற்று முன்தினம் (03) இடம்பெற்ற திடீர் மின்வெட்டு நாசகார செயலா என்பது தொடர்பில் ஆராய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மின் விநியோகம் துண்டிக்கப்படுமென இலங்கை மின்சார சபை நேற்று முன்தினம் இரவு அறிவிக்காத போதிலும், சில பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டிருந்தது.

ஏனைய செய்திகள்