மன்னாரில் 6 வயது சிறுவன் விபத்தில் பலி

மன்னாரில் லொறி முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்து: 6 வயது சிறுவன் பலி

by Staff Writer 05-02-2022 | 4:29 PM
Colombo (News 1st) மன்னார் - ஓலைத்தொடுவாய் சந்தியில் லொறியொன்றும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்திற்குள்ளானதில் 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். பேசாலையிலிருந்து பயணித்த முச்சக்கரவண்டி ஓலைத்தொடுவாய் வீதியூடாக திரும்பும் போது, பின்னால் வந்த லொறி முச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளது. இந்த விபத்து இன்று (05) காலை 09 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, முச்சக்கரவண்டியில் தாய், அவரது இரு பிள்ளைகள் மற்றும் தாயின் சகோதரன் ஆகியோரே பயணித்துள்ளனர். இந்த விபத்தில் சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், பலத்த காயமடைந்த ஏனைய மூவரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். லொறி சாரதியின் கவனயீனமே விபத்திற்கான காரணமென தெரியவந்துள்ளதுடன், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், சந்தேகநபரை நாளை (06) மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.