COVID பரவல் மீண்டும் அதிகரிப்பு

அதிதீவிர சிகிச்சை பிரிவுகளில் COVID நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

by Staff Writer 05-02-2022 | 4:46 PM
Colombo (News 1st) ஒமிக்ரோன் தொற்றுடன் ஒக்சிஜனை சார்ந்துள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 4 முதல் 5 வீதம் வரை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதேயளவு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைப் பிரிவு பணிப்பாளர் மற்றும் கொரோனா ஒருங்கிணைப்பு அதிகாரி, மருத்துவர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார். COVID நோயாளிகள் பதிவாகும் வீதத்தை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வாரம் 30 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மரணங்களின் எண்ணிக்கை 10 வீதம் அதிகரித்துள்ளதாகவும் மருத்துவர் அன்வர் ஹம்தானி சுட்டிக்காட்டினார். அத்துடன், கடந்த சில வாரங்களில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரில் மூன்றில் இரண்டு வீதமானோர் முழுமையாக தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளாதவர்களென சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைப் பிரிவு பணிப்பாளர் மற்றும் கொரோனா ஒருங்கிணைப்பு அதிகாரி டொக்டர் அன்வர் ஹம்தானி கூறினார். எனவே, இதுவரை முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்கள், தமக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார். இதனிடையே, எதிர்வரும் நாட்களில் சுமார் 70 வீதமானோருக்கு பூஸ்டர் தடுப்பூசியை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவ்வாறு தடுப்பூசியை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் தற்போதைய இயல்பு வாழ்க்கையை முன்கொண்டு செல்ல முடியும் எனவும் மருத்துவர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.