வடக்கில் மீனவர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம்; சுமூகமான தீர்வு எட்டப்பட்டுவிட்டதாக டக்ளஸ் தெரிவிப்பு

by Staff Writer 05-02-2022 | 8:30 PM
Colombo (News 1st) Sea Of Srilanka எனப்படும் இலங்கையின் கடல் வளம் இந்திய மீனவர்களால் சூறையாடப்படுவதற்கு இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. இந்நிலையில், COVID நிலைமை காரணமாக கச்சத்தீவு திருவிழாவிற்கு இந்தியர்கள் அனுமதிக்கப்படாமையும் பிரச்சினையாகியுள்ளது. இந்திய மீனவர்களின் அத்துமீறலை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரியும் தமது வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துமாறு கோரியும் மன்னாரில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தேசிய மீனவர் ஒத்துழைப்பு பேரவை ஏற்பாடு செய்திருந்த இந்த கவனயீர்ப்பு போராட்டம் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவுள்ள சுற்றுவட்ட வீதியில் நடைபெற்றது. இந்நிலையில் மீனவர்களின் போராட்டத்திற்கு சுமூகமான தீர்வு எட்டப்பட்டுள்ளதாக இன்று (05) நடைபெற்ற தேசிய மீனவர் சம்மேளனத்தின் பணிப்பாளர் சபை கூட்டத்தின் பின்னர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். சக தமிழ் அரசியல் கட்சிகள் மக்களை குழப்பியுள்ளதாகவும் மக்களின் பிரச்சினையை தீர்க்கக்கூடாது என்பதுதான் அவர்களுடைய உள்நோக்கம் எனவும் குறிப்பிட்ட டக்ளஸ் தேவானந்தா, இவ்விடயத்தை புரிந்துகொண்ட வட மாகாண கடற்றொழிலாளர்கள் தனது வாக்குறுதியை அடுத்து, போராட்டத்தை கைவிட்டு தொழிலுக்கு சென்றுவிட்டதாகவும் கூறினார். இந்நிலையில் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவில் தமிழக மீனவர்கள் தடையின்றி பங்கேற்க வழிவகை செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் பாரம்பரியமாக கொண்டாடப்படும் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவில் தமிழக மீனவர்களும் பக்தர்களும் பங்கேற்க வேண்டும் என அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா அடுத்த மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. COVID தொற்று நிலைமை காரணமாக, சுகாதார அமைச்சின் வழிகாட்டலின் படி இந்திய பக்தர்களை திருவிழாவிற்கு அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ். அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் குறிப்பிட்டுள்ளார்.