கிணற்றினுள் வீழ்ந்த சிறுவனை மீட்க போராட்டம்

104 அடி கிணற்றினுள் வீழ்ந்த சிறுவனை மீட்க 3 நாட்களாக போராட்டம்

by Bella Dalima 04-02-2022 | 5:52 PM
Colombo (News 1st) மொரோக்கோவில் குறுகலான கிணறு ஒன்றினுள் வீழ்ந்த சிறுவனை மீட்க மூன்று நாட்களாக பாரிய மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. Chefchaouen பகுதியில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Tamrout நகரில் இந்த அனர்த்தத்தை ரயன் (Rayan) எனப்படும் 5 வயது சிறுவன் எதிர்நோக்கியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை (01) மாலை கிணற்றின் அருகில் விளையாடிக்கொண்டிருந்தபோது தவறுதலாக கிணற்றினுள் சிறுவன் வீழ்ந்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும், கிணற்றினுன் கெமரா கொண்டு பரிசோதித்ததில் தலையில் சிறு காயங்களுடன் சிறுவன் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சிறுவனை மீட்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து இரவு பகலாக மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. ரயான் சுமார் 104 அடி ஆழத்தில் வீழ்ந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் சிறுவன் வீழ்ந்துள்ள பகுதியை தற்போது நெருங்கியுள்ளதாக மொரோக்கோ அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த சிறுவன் விரைவாக மீட்கப்பட்டு, குடும்பத்துடன் இணைய வேண்டுமென்பதே அனைவரினதும் பிரார்த்தனையாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.