கச்சத்தீவு திருவிழா தொடர்பில் மு.க.ஸ்டாலின் கடிதம்

கச்சத்தீவு திருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்பதை உறுதி செய்யுமாறு மு.க.ஸ்டாலின் வௌியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம்

by Bella Dalima 04-02-2022 | 5:02 PM
Colombo (News 1st) கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழாவில் தமிழக மீனவர்கள் தடையின்றி பங்கேற்பதை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர்களும் பக்தர்களும் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்துடன் ஆன்மீக மற்றும் உணர்வுப்பூர்வமான தொடர்பை பல ஆண்டுகளாகக் கொண்டுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கச்சத்தீவு திருவிழாவில் தமிழக பக்தர்கள் பங்கேற்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமது அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். பல்வேறு காரணங்களை முன்வைத்து இவ்வாண்டு கச்சத்தீவு திருவிழாவில் தமிழக மீனவ பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளமை தமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். திருவிழாவில் பங்கேற்பது இருநாட்டு மக்களிடையேயும் நல்லுறவை வளர்க்க உதவும் என தாம் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்து குறித்த கடிதத்தினை கையளித்துள்ளார்.