வட பகுதி மீனவர்களின் போராட்டம் தொடர்கிறது

வட பகுதி மீனவர்களின் போராட்டம் தொடர்கிறது

எழுத்தாளர் Staff Writer

04 Feb, 2022 | 8:17 pm

Colombo (News 1st) 74 ஆவது சுதந்திர தினம் இன்று (04) கொண்டாடப்படும் நிலையில், சுதந்திரம் அற்றுப்போன பலரும் எம் மத்தியில் இருக்கவே செய்கின்றனர். வட பகுதி மீனவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

Sea Of Sri Lanka எனப்படும் இலங்கையின் கடல் வளத்தில் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுத்து நிறுத்துமாறு கோரி வட பகுதி மீனவர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

யாழ். வத்திராயன் கடற்பரப்பில் இரண்டு மீனவர்கள் உயிரிழந்தமைக்கும் இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறலுக்கும் எதிர்ப்பு தெரிவித்து யாழ். சுப்பர்மடம் மீனவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்தது.

பொதுமக்களின் இயல்வு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அல்லது வீதியில் அசௌகரியங்களை உண்டு பண்ணும் வகையிலான அனைத்து செயற்பாடுகளையும் இடைநிறுத்துமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை நேற்றிரவு பருத்தித்துறை பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் பிரதிநிதிகள் சிலரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு சென்றிருந்தனர்.

இதன்போது, உயிரிழந்த சுப்பர்மடம் பகுதியை சேர்ந்த இரு மீனவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனிடையே கிளிநொச்சி தேசிய மீனவர் ஒத்துழைப்பின் ஏற்பாட்டில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி – பூநகரி கடற்றொழில் கூட்டுறவு சங்க சமாசங்களுக்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

Sea Of Sri Lanka எனப்படும் இலங்கையின் கடல் வளத்தில் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு தொடர்ச்சியாக நடந்தேறி வருவதை நியூஸ்ஃபெஸ்ட் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டியிருந்தது.

எமது கடற்பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழையும் இந்திய மீனவர்கள் கடந்த காலங்களில் எமது மீனவர்களின் வலைகளை அறுத்ததுடன், கடல் வளத்தையும் நாசப்படுத்துகின்றனர்.

தற்காலிகமாக இவர்கள் கைது செய்யப்படுவதும் பின்னர் விடுதலை செய்யப்படுவதும் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்