சர்வதேச நாணய நிதியத்திடம் ஒத்துழைப்பு கோரல்

சர்வதேச நாணய நிதியத்திடம் ஒத்துழைப்பு கோரும் அரசாங்கம்

by Bella Dalima 03-02-2022 | 8:52 PM
Colombo (News 1st) நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதியை பெற்றுக்கொள்வது தொடர்பில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ நேற்று (02) தெரிவித்த கருத்திற்கு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இன்று பதிலளித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் நிபுணத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நேற்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், இன்று காலை ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டிருந்தார். நிதி அமைச்சுக்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை பெறுவது வழமையான ஒன்றென அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று நிதி அமைச்சர் வௌியிட்ட கருத்து தொடர்பிலானது. இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பிலான சர்வதேச நாணய நிதியத்தின் நிபுணத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்வதென்பது நிதி அமைச்சின் நிதி பிரிவின் மேம்பாட்டிற்காக தொழில்நுட்ப ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் வழமையான செயற்பாடாகும். அதனை விட வேறு ஒன்றும் இல்லை
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிவாரணங்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் நிதி அமைச்சரும் மத்திய வங்கியின் ஆளுநரும் இவ்வாறு கருத்துத் தெரிவிக்கும் போது, இலங்கை சீமெந்து மற்றும் அரிசி கொள்வனவிற்காக பாகிஸ்தானிடம் கோரியுள்ள 200 மில்லியன் டொலர் கடன் வசதியை அந்நாட்டிற்கு IMF மூலம் கிடைக்கவுள்ள கடனிலிருந்து வழங்குவதற்கு பாகிஸ்தான் தயாராகின்றது. தேவையற்ற செலவுகளை குறைத்தல் உள்ளிட்ட விடயங்களுக்கு பாகிஸ்தான் காட்டும் சிறந்த ஆர்வத்தை கருத்திற்கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு பாகிஸ்தானுக்கு இந்த கடனை வழங்க தயாராகின்றமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச நாணய நிதியம் ஒரு பில்லியன் டொலர் கடனை வழங்கிய பின்னர், இலங்கைக்கு சீமெந்து மற்றும் அரிசி கொள்வனவிற்கு தேவையான 200 மில்லியன் டொலரை வழங்குவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.