மின்வெட்டு தொடர்பில் மின்சார சபைக்கும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் இடையில் முரண்பாடு

மின்வெட்டு தொடர்பில் மின்சார சபைக்கும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் இடையில் முரண்பாடு

எழுத்தாளர் Bella Dalima

03 Feb, 2022 | 7:12 pm

Colombo (News 1st) சில மின்னுற்பத்தி நிலையங்களில் எரிபொருள் முடிவடைந்ததால், இன்று (03) மாலை 5.30-க்கும் இரவு 9.30-க்கும் இடைப்பட்ட நேரத்தில் மின்வெட்டை அமுல்படுத்த நேரிடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இன்று மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான எந்தவொரு அனுமதியையும் இலங்கை மின்சார சபை பெறவில்லை என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க கூறினார்.

285 மெகாவாட் மின்சார கொள்ளளவைக் கொண்ட களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்கான எண்ணெய் முடிவடைந்ததால், அந்த மின் உற்பத்தி நிலையம் தற்போது செயலிழந்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் உள்ள 60 மெகாவாட் மிதக்கும் மின்னுற்பத்தி நிலையமும் எண்ணெய் இல்லாததால் மின் உற்பத்தி செயற்பாடுகளை நிறுத்தியுள்ளது.

மத்துகமவில் உள்ள 16 மெகாவாட் மின்னுற்பத்தி நிலையமும் செயலிழந்துள்ளதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இன்று மாலை 5.30-க்கும் இரவு 9.30-க்கும் இடைப்பட்ட நேரத்தில் கேள்விக்கு ஏற்ற விநியோகம் இன்மையால் தன்னியக்கம் அல்லாத மின் துண்டிப்பு ஏற்படலாம் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், திட்டமிடப்பட்ட வகையில் இன்று மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான அனுமதி பெறப்படாத நிலையில், அத்தகைய மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டால் மின்சார சபை சட்டத்திற்கு அமைய நடவடிக்கை எடுப்பதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க வலியுறுத்தினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்