பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதானோர் படிப்படியாக விடுதலை

by Bella Dalima 02-02-2022 | 5:53 PM
 Colombo (News 1st) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 13 பேர் நேற்றும் இன்றும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 9 பேருக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று (02) பிணை வழங்கப்பட்டுள்ளது. 50 இலட்சம் ரூபா வீதமான இரண்டு சரீர பிணைகளில் இவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும், இவர்கள் பிணை கோரிக்கையை நிறைவேற்றாமையினால் தொடர்ந்து மெகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். இதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 04 பேருக்கு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தினால் இன்று பிணை வழக்கப்பட்டுள்ளது. ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் கருப்பையா ஜீவராணி முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சட்டமா அதிபரின் பரிந்துரைக்கு அமைய, சந்தேகநபர்கள் நான்கு பேருக்கும் பிணை வழங்கி நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். செங்கலடி, சித்தாண்டி, ஏறாவூர் மற்றும் ஐயங்கேணி பகுதிகளை சேர்ந்த நான்கு பேர், கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27, 28 ஆம் திகதிகளில் கைது செய்யப்பட்டனர். தமது முகப்புத்தகத்தில் இட்ட பதிவுகளை அடிப்படையாக வைத்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேகநபர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். சுமார் 13 மாதங்களின் பின்னர் , சட்ட மா அதிபரின் பரிந்துரைக்கு அமைய, சந்தேகநபர்கள் நால்வரும் தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் செல்வதற்கு அனுமதி இன்று வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த ஐந்து தமிழ் கைதிகள் கடந்த மாதம் 9 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்படுகின்றனர். அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டத்தில் பல திருத்தங்களை மேற்கொள்வதற்கு கடந்த 28 ஆம் திகதி அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் தற்காலிக ஏற்பாடுகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக, அன்றைய தினம் வர்த்தமானியிலும் வெளியிடப்பட்டது. இதேவேளை, தற்போதுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும் என வௌிவிவகார அமைச்சர் G.L.பீரிஸ் கடந்த 29 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் நெருங்கும் நிலையில், அரசாங்கம் நீதிக்கான அணுகல் திட்டத்தை வடக்கில் முன்னெடுத்தது. காணாமல் போனவர்களின் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் மற்றும் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோர் வடக்கிற்கு சென்று கேட்டறிந்துகொண்டனர்.

ஏனைய செய்திகள்