மின் விநியோகத்தில் தொடர்ந்தும் சிக்கல்

மின் விநியோகத்தில் தொடர்ந்தும் சிக்கல்

எழுத்தாளர் Bella Dalima

02 Feb, 2022 | 8:58 pm

Colombo (News 1st) மின்சார உற்பத்திக்கு தேவையான 10,000 மெட்ரிக் தொன் டீசல் இன்று பிற்பகல் வரை கிடைக்கவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்தது.

இன்று பிற்பகல் 4 மணி வரை டீசல் கிடைத்திருக்கவில்லை என மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் அன்ரூ நவமணி கூறினார்.

இந்த நிலைமை தொடர்ச்சியான மின் விநியோகத்திற்கு இடையூறாக அமையலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று மின் பிறப்பாக்கிகளையும் 300 மெகாவாட் கொள்ளளவுடன் இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

எரிபொருள் பற்றாக்குறை மற்றும் திடீரென ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக அவ்வப்போது சில மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழந்ததுடன், நேற்றிரவும் சில பகுதிகளுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டது.

தேசிய மின் கட்டமைப்பில் சுமார் 100 மெகாவாட் மின்சாரத்திற்காக பற்றாக்குறை நிலவியதன் காரணமாகவே மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

சுமார் ஒரு மாதமாக தேசிய கட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டிருந்த 300 மெகாவாட் மின்சார கொள்ளளவு கொண்ட நுரைச்சோலை மூன்றாவது மின்னுற்பத்தி நிலையத்தின் 160 மெகாவாட் மின்சாரம் இன்று தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மிதக்கும் மின் உற்பத்தி நிலையத்தின் 60 மெகாவாட் மின்சாரமும் இன்று பகல் மீண்டும் தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது.

செயலிழந்திருந்த சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையத்தையும் இன்று பகலில் இருந்து மீண்டும் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

களனிதிஸ்ஸ ​Sojitz மின்னுற்பத்தி நிலையம் இன்னமும் செயலிழந்துள்ளது.

மின்னுற்பத்தி நிலையங்களின் உற்பத்தி அளவை 25 வீதம் வரை குறைத்து இரவு வேளையில் மாத்திரம் மின் உற்பத்தியை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொத்மலை நீர் தேக்கத்தில் 64 வீதம் வரையும், விக்டோரியா நீர்த் தேக்கத்தில் 51 வீதம் வரையும் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதுடன் அந்த நீரை தக்கவைத்துக் கொள்ளும் ரன்தெனிகல நீர்த் தேக்கத்தின் நீர் மட்டமும் 85 வீதம் வரை இன்று குறைவடைந்திருந்தது.

ரன்டெம்பே நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 17 வீதம் வரையும் போவதென்ன நீர் தேக்கத்தின் நீர் மட்டம் 59 வீதம் வரையும் குறைவடைந்துள்ளது.

காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 41 வீதமாக அமைந்துள்ளதுடன், மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 52 வீதமாக அமைந்துள்ளது.

நீர் மட்டம் குறைவடைந்துள்ள நிலையில், காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களில் மூழ்கியிருந்த கட்டட சிதைவுகளும் தென்படுகின்றன.

சமனல வெவ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டமும் 35 வீதமாக குறைவடைந்துள்ளது.

நீர்த்தேக்கங்களிலிருந்து மின் உற்பத்திக்காக அதிகளவில் நீர் வௌியேற்றப்பட்டதால், அந்த நீர் குறித்த ஆறுகளுடன் தொடர்புடைய இறுதி நீர்த்தேக்கங்களில் நிரம்பியுள்ளது.

இதன் காரணமாக மகாவலி, சமனல மற்றும் லக்ஸபான நீர் மின் உற்பத்தி நிலையங்களுக்கு மேலாக அமைந்துள்ள மின் உற்பத்தி நிலையங்களின் மின் உற்பத்தி இயலுமை விரைவில் முடிவுக்கு வரவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்