இலங்கை மீனவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட 21 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

by Staff Writer 01-02-2022 | 6:21 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பிரப்பில் இலங்கை மீனவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 21 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் இந்திய மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் 07 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் குறிப்பிட்டார். பருத்தித்துறை கடற்பரப்பில் பிடிக்கப்பட்ட 21 இந்திய மீனவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மீனவரை இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பியுள்ளதாக ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார். இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட போது, வடக்கு மீனவர்களால் தமிழக மீனவர்கள் நேற்றிரவு சுற்றிவளைக்கப்பட்டனர். இரண்டு படகுகளில் வருகை தந்த 21 மீனவர்கள் மடக்கி பிடிக்கப்பட்டதுடன், கடற்படையின் ஒத்துழைப்புடன் அவர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டு, இன்று பகல் கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். Sea of Sri Lanka எனப்படும் இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக அத்துமீறி பிரவேசித்து வருகின்றனர் இந்த நிலையில், நேற்றிரவு 11 மணியளவில் பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியிலிருந்து இரண்டு கடல்மைல் தொலைவிலுள்ள Sea of Sri Lanka எனும் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த இந்திய விசைப்படகுகள் வழமைபோன்று எமது கடல்வளத்தை சூறையாடின. இதன்போது, சம்பவ இடத்திற்கு விரைந்த இலங்கை மீனவர்கள், இந்திய மீனவர்களை சுமார் ஒரு மணித்தியாலம் வரை சுற்றிவளைத்த நிலையில், குறித்த பகுதிக்கு கடற்படையினர் விரைந்து இந்திய மீனவர்களை கைது செய்தனர். 21 இந்திய மீனவர்களுடன் இரண்டு விசைப்படகுகளை கடற்படையினர் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார். இதனிடையே, இந்திய மீனவர்களை தடுக்கும் முயற்சியில் காயமடைந்த இரண்டு மீனவர்கள் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். சம்பவத்தை கேள்வியுற்று நேற்றிரவு குறித்த பகுதிக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்றபோது, மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த 68 மீனவர்கள் இம்மாதம் இரண்டு சந்தர்ப்பங்களில் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் 43 பேருக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார். இதேவேளை, இலங்கை கடற்பரப்பில் ஏற்கனவே கைப்பற்றப்பட்டு நீண்டகாலம் கடற்படையினரின் பொறுப்பிலுள்ள 105 படகுகளை பகிரங்க ஏலத்தில் விடுவதற்கு கடற்றொழில் அமைச்சு அண்மையில் தீர்மானித்தது. இந்த பின்புலத்திலேயே இந்திய மீனவர்கள் மீண்டும் இலங்கை கடலை ஆக்கிரமித்து வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமற்போயிருந்தனர் இவர்கள் இருவரும் இந்திய மீனவர்களின் படகு மோதியே விபத்திற்குள்ளானதாக வத்திராயன் மீனவர்கள் குற்றம் சுமத்தினர். இவர்களை தேடுவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்ற மீனவர்கள் இந்திய ட்ரோலர் படகுகளை அவதானித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு வடக்கு கடலை ஆக்கிரமத்த நூற்றுக்கணக்கான இந்திய ட்ரோலர் படகுகள் இலங்கை மீனவர்களின் வலைகளை அறுத்துச்சென்றன. இந்த பின்னணியின் காணாமற்போயிருந்த மீனவர்கள் இருவரும் நேற்று சடலங்களாக மீட்கப்பட்டனர். இந்த உயிரிழப்புகளுக்கு நீதி கோரி வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தினை முற்றுகையிட்டு பிரதேச மீனவர்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இடையூறின்றி ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளுமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்தமைக்கு மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனையடுத்து, புதுக்காடு - தாழையடி பிரதான வீதியை மறித்து 300-க்கும் மேற்ப்பட்ட மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட இடத்திற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்று மீனவர்களுடன் கலந்துரையாடியபோது அமைதியின்மை ஏற்பட்டது. இதனிடையே, பொன்னாலை - பருத்தித்துறை வீதியின் பல பகுதிகளில் இந்திய மீனவர்களின் அத்துமீறலை நிறுத்தக்கோரியும் வத்திராயன் கடற்பரப்பில் உயிரிழந்த யாழ். மீனவர்களுக்கு நீதி கோரியும் வீதி மறியல் போராட்டங்கள் இடம்பெற்றன. பொன்னாலை பகுதியில் படகுகளால் வீதியினை மறித்து மீனவர்கள் இன்று தமது எதிர்ப்பினைத் தெரிவித்தனர். வளலாய் பகுதியிலும் மீனவர்கள் தமது கண்டனத்தை பதிவு செய்தனர். இதனிடையே பொலிகண்டியிலுள்ள மீனவர்களும் வீதி மறியலை முன்னெடுத்து வருகின்றனர்.