27 பேரை விடுவிக்க நடவடிக்கை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 27 பேரை விடுவிக்க நடவடிக்கை

by Staff Writer 31-01-2022 | 10:12 PM
Colombo (News 1st) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 27 பேர் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளதாக பத்திரிகை ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் தமிழ் பத்திரிகைகளின் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகள் என்று சட்டத்தின் அடிப்படையில் எவரும் இல்லையெனவும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் உள்ளதாகவும் நீதி அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளதாக குறித்த செய்தியில் குறிப்பிப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிணை வழங்குவது மற்றும் விடுதலை செய்வது தொடர்பாக ஜனாதிபதிக்கு பரிந்துரை வழங்குவது குறித்து ஆலோசனைக் குழுவொன்றை முன்னாள் பிரதமர நீதியரசர் அசோக்க டி சில்வா தலைமையில் அமைத்துள்ளதை இன்போது சுட்டிக்காட்டிய நீதி அமைச்சர், குறித்த குழுவிற்கு 44 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதையும் இந்த சந்திப்பில் தெரிவித்துள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விண்ணப்பங்கள் ஆராயப்பட்டதன் பின்னர் 27 பேரை விடுவிப்பதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் நீதி அமைச்சர் தெரிவித்தாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்ட 16 பேர் கடந்த வெசாக்கின் போது விடுதலை செய்தமையையும் இதன்போது நீதி அமைச்சர் நினைவு கூர்ந்ததாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.