எரிபொருள் தீர்ந்து போகும் நிலை...

பல மின் உற்பத்தி நிலையங்களில் எரிபொருள் தீர்ந்து போகும் நிலை...

by Staff Writer 30-01-2022 | 6:58 PM
Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்தில் இயங்கும் மிதக்கும் மின் உற்பத்தி நிலையத்தில் தொடர்ந்தும் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுமாயின், அதற்கு தேவையான எரிபொருள் இன்றைய தினத்திற்கும் (30) போதுமானதாக இல்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தில் தொடர்ந்தும் மின் உற்பத்தி செய்யப்பட்டால், இன்றைய தினத்திற்கு மாத்திரமே எரிபொருள் போதுமானதாக இருக்கும் என மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளரும் ஊடகப் பேச்சாளருமான அன்ட்ரூ நவமணி குறிப்பிட்டுள்ளார். கெரவலப்பிட்டி யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்திலும் இன்றைய தினத்திற்கு (30) மாத்திரமே எரிபொருள் போதுமானதாக உள்ளது. எவ்வாறாயினும், களனதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தில் மேலும் 4 நாட்களுக்கு போதுமான எரிபொருள் உள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. போதுமான எண்ணெய் இல்லையென்பதால், சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையத்தின் ஒரு நிலையம் செயலிழந்துள்ளது. பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து தொடர்ச்சியாக எரிபொருள் கிடைப்பதுடன் நாளையும் (31) தேவையான எரிபொருள் கிடைக்கும் என இலங்கை மின்சார சபை எதிர்பார்ப்பதாக சபையின் மேலதிக பொது முகாமையாளர் குறிப்பிட்டார். டிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான நீரை தவிர, மகாவலி மற்றும் நீர்ப்பாசன திணைக்களத்திற்கு உரித்தான நீர்த்தேக்கங்களில் நீர்மின் உற்பத்தியை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை மழையுடனான வானிலையை எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், எதிர்வரும் மார்ச் மாதம் வரை நாடளாவிய ரீதியில் அதிக வெப்பத்துடனான வானிலேயே நிலவும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.