COVID-19 தடுப்பூசி திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தி

by Staff Writer 29-01-2022 | 3:55 PM
Colombo (News 1st) இலங்கையில் COVID-19 தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது. கடந்த ஜனவரி 29 ஆம் திகதி முதல் இதுவரை 35 மில்லியனுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். 2,30,29,353 Sinopharm தடுப்பூசிகளும் 77, 98,598 Pfizer தடுப்பூசிகளும் 28,99,460 AstraZeneca தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. அதனை தவிர 15,92,162 Moderna தடுப்பூசிகளும் 3,14, 924 Sputnik தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டார். முதல் தடுப்பூசி 1, 66, 26,011 பேருக்கும் இரண்டாவது தடுப்பூசி 1, 39,11,181 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், 5,97,305 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, அடுத்த வாரம் முதல் நாடளாவிய ரீதியில் விசேட தடுப்பூசி செலுத்தும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர், வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினூடாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ள நிலையில், இதுவரை நாட்டின் சனத்தொகையில் 63 வீதமானோருக்கு இரண்டாவது தடுப்பூசி ஏற்றப்படடுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். எனினும், 24 வீதமானோரே பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றியுள்ளனர். தற்போதைய நிலைமையில், பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக்கொள்வது குறைவடைந்துள்ளதால், அடுத்த வாரத்தில் அதற்கான தௌிவூட்டல்களை வழங்கி, மக்களின் ஒத்துழைப்புடன் தடுப்பூசி ஏற்றும் திட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே மேலும் தெரிவித்தார்.