புதிய வகை NeoCov வைரஸ் மனிதர்களுக்கு பரவும் அபாயம்

புதிய வகை NeoCov வைரஸ் மனிதர்களுக்கு பரவும் அபாயம்

by Bella Dalima 29-01-2022 | 5:43 PM
Colombo (News 1st) வுஹான் நகரில் தோன்றியதாகக் கருதப்படும் கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த கொரோனா தொடா்ந்து உருமாற்றம் பெற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஒவ்வொரு உருமாறிய வகை கொரோனா பரவும்போதும் கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளின் சுகாதாரக் கட்டமைப்புகளை மட்டுமல்லாமல் பொருளாதாரத்தையும் கொரோனா தொற்று பரவல் வெகுவாகப் பாதித்துள்ளது. இதனிடையே, வௌவாலில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸான ‘நியோகோவ் -NeoCov’ எதிர்காலத்தில் மனிதா்களுக்குப் பரவும் வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கையில் வுஹான் நிபுணர்கள் எச்சரித்துள்ளனா். இது தொடா்பாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், NeoCov வைரஸானது MERS வகை கொரோனா வைரஸ் வகையைச் சோ்ந்தது. நியோகோவ் வைரஸ் தென்னாப்பிரிக்காவில் உள்ள வௌவால்களில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வரை விலங்குகளிடையே மட்டுமே வைரஸ் பரவி வருகிறது. ஆனால், எதிர்காலத்தில் மனிதா்களுக்கும் இந்த கொரோனா பரவ வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில், இன்னும் ஒரே ஒருமுறை உருமாற்றம் பெற்றால், நியோகோவ் வைரஸ் மனிதா்களுக்குப் பரவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மனிதா்களிடம் பரவினால் அதன் பரவல் வேகம் அதிகமாக இருக்குமென்றும், பாதிக்கப்பட்டவா்களில் 3-இல் ஒருவர் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும் ஆராய்ச்சியாளா்கள் எச்சரித்துள்ளனா். இந்நிலையில், நியோகோவ் வைரஸ் குறித்து மேலும் ஆராயப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.