கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

சுதந்திர சதுக்கத்தை அண்டிய பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம்

by Staff Writer 29-01-2022 | 3:26 PM
Colombo (News 1st) இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின தேசிய கொண்டாட்டம் மற்றும் அதற்கான ஒத்திகை நிகழ்வு காரணமாக இன்று (29) முதல் சுதந்திர தினம் வரை கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்டிய பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திர சதுக்கத்தில் இன்று முதல் பெப்ரவரி 03 ஆம் திகதி வரை ஒத்திகை நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன. இந்நாட்களில் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இது தொடர்பான ஒத்திகை நிகழ்வு இடம்பெறவுள்ளது. சுதந்திர தினத்தன்று காலை 6 மணி முதல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. அதற்கமைய, குறித்த வேளையில் அதனை அண்டிய வீதிகளில் விசேட வாகனப் போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதனால் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தை, நூலக சந்தியிலிருந்து மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தை, தர்மபால மாவத்தையில் F.R.சேனாநாயக்க மாவத்தை, சொய்சா சுற்றுவட்டம் நோக்கி C.W.W.கன்னங்கரா மாவத்தை, F.R.சேனாநாயக்க மாவத்தையிலிருந்து C.W.W.கன்னங்கரா மாவத்தை, பிரேமகீர்தி அல்விஸ் மாவத்தையிலிருந்து சுதந்திர வீதிக்கு செல்லும் பகுதி, இலங்கை மன்றம் அருகிலிருந்து சுதந்திர சதுக்கத்தை நோக்கி செல்லும் வீதி, சுதந்திர சுற்றுவட்டத்தின் ஊடாக சுநத்திர வீதி உள்ளிட்ட பகுதிகளில் இடைக்கிடையே வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.