Colombo (News 1st) பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வரும் ஆப்கானிஸ்தான் மக்கள் வாழ்வதற்காக தமது உடல் உறுப்புகளையும் குழந்தைகளையும் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டத்தின் தலைவர் டேவிட் பேஸ்லி (David Beasley) தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் ஆழ்ந்த கவலை வௌியிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் 50 வீத்திற்கும் மேலான மக்கள் உணவின்றி பட்டினி கிடப்பதால், அந்நாட்டிற்கு தேவையான உதவிகளை சர்வதேச சமூகம் உடனடியாக செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வறட்சி, பெருந்தொற்று, பொருளாதார சரிவு, பல ஆண்டுகளாக தொடர்ந்த போர் என பல்வேறு முனைகளிலும் ஆப்கானிஸ்தான் சிக்கி தவித்து வருகிறது.
அங்கு சுமார் 2 கோடியே 40 இலட்சம் பேர் போதுமான உணவின்றி தவித்து வருவதாகவும் இந்த குளிர்காலத்தில் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் பஞ்சத்தை எதிர்கொள்வார்கள் என்றும் 97 சதவீத மக்கள் இந்த ஆண்டு வறுமைக்கோட்டிற்கு கீழே செல்வார்கள் என்றும் அச்சம் வௌியிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் நான் சந்தித்த ஒரு பெண், தன் மகளுக்கு நன்றாக உணவளிக்க வேண்டும் என்பதற்காக வேறொரு குடும்பத்திற்கு அவரை விற்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இந்த கொரோனா காலத்தில், உலகின் பணக்காரர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பணம் சம்பாதித்துள்ளனர். மொத்தமாக, நாளொன்றுக்கு 5.2 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிற்கு அவர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. நமது குறுகிய கால நெருக்கடிகளை நிவர்த்தி செய்ய, நாள் ஒன்றுக்கு அதிகரித்துள்ள அவர்களின் பணமே போதுமானது
என டேவிட் பேஸ்லி தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நோர்வே, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் விசேட பிரதிநிதிகள் மற்றும் தூதுவர்கள் ஜனவரி 24 ஆம் திகதி ஒஸ்லோவில் சந்தித்து, ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து விவாதித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில்,
ஆப்கானிஸ்தானில் உள்ள மனிதாபிமான நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டிய அவசரத் தேவை உள்ளது. நாடு முழுவதும் உள்ள ஆப்கன் மக்களின் துன்பத்தைத் தணிக்க எடுக்க வேண்டிய தேவையான நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது
என குறிப்பிடப்பட்டுள்ளது.
டேவிட் பேஸ்லி (David Beasley)