2.15 மில்லியன் டொலர் இழப்பீடு கிடைக்கவுள்ளது

X-Press Pearl தீ விபத்து: மேலும் 2.15 மில்லியன் டொலர் இழப்பீடு கிடைக்கவுள்ளது

by Bella Dalima 28-01-2022 | 3:40 PM
Colombo (News 1st) MV X-Press Pearl கப்பல் தீப்பற்றியதால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக மேலும் 2.15 மில்லியன் டொலர் இழப்பீடு கிடைக்கவுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்தது. எதிர்வரும் சில நாட்களில் இழப்பீட்டுத்தொகை இலங்கைக்கு கிடைக்கும் என சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார். ஏற்கனவே 3.6 மில்லியன் டொலர் இழப்பீடு கிடைத்ததாக அவர் குறிப்பிட்டார். இரண்டாம் கட்டமாக 2.15 மில்லியன் டொலர் இழப்பீடு கிடைக்கவுள்ளதுடன், மூன்றாவது கட்ட இழப்பீடும் தயாரிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது கட்ட இழப்பீட்டுத் தொகை குறித்து அனுமதி கிடைத்தவுடன், சட்ட மா அதிபர் ஊடாக கப்பல் நிறுவனத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அத்துடன், சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்த மதிப்பீடுகள் இந்நாட்களில் முன்னெடுக்கப்படுவதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டது. இது தொடர்பிலான முதலாவது அறிக்கை, இலங்கையின் நிபுணர்கள் குழுவினால் சட்டமா அதிபரூடாக அவுஸ்திரேலியாவின் சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் ஆலோசனைக்கமைய, குறித்த சுற்றுச்சூழல் தொடர்பான அறிக்கை மேலும் விரிவாக தயாரிக்கப்படவுள்ளது. இதேவேளை, MV X-Press Pearl கப்பல் தீப்பற்றிய கடற்பிராந்தியத்திற்கு அருகிலுள்ள கொள்கலன்கள் உட்பட கப்பலின் சிதைவுகளில் 70 வீதம் அகற்றப்பட்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார். அத்துடன், சிதைவடைந்த கப்பலை மே மாதத்திற்கு முன்னர் அகற்ற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.