மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

28 Jan, 2022 | 4:04 pm

Colombo (News 1st) தேசிய மின் கட்டமைப்பிற்கு 20 மெகாவாட் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்தது.

இதனால், இன்று (28) மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரையான காலப்பகுதியில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அமைச்சர் காமினி லொக்குகே மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

மின்சார சபையின் அறிக்கைகளின் படி, நேற்றிரவு 7 மணியளவிலேயே மின்சாரத்திற்கு அதிகபட்ச கேள்வி நிலவியுள்ளது.

2572.1 மெகாவாட் மின்சாரத்திற்கான கேள்வி நிலவியுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

தேசிய மின்கட்டமைப்பிற்கு 163 மெகாவாட் மின்சாரத்தை வழங்கும் களனிதிஸ்ஸயின் Sojitz மின் உற்பத்தி நிலையம் மற்றும் 300 மெகாவாட் மின்சாரத்தை வழங்கும் நுரைச்சோலையில் உள்ள மூன்றாவது மின்பிறப்பாக்கி ஆகியன தொடர்ந்தும் செயலிழந்துள்ளன.

இதேவேளை, சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையத்திற்கு தேவையான 33,000 லிட்டர் எண்ணெய் நேற்று (27) வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 7 நாட்களுக்கு தேவையான டீசல் தொகை கையிருப்பிலுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

ஜனவரி 31 ஆம் திகதி வரை நாளாந்தம் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று அறிவித்திருத்தமையும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்