படகுகள் ஏலத்தை தடுக்குமாறு அ.தி.மு.க கோரிக்கை

இந்திய மீனவர் படகுகள் ஏலம் விடப்படுவதை தடுக்குமாறு அ.இ.அ.தி.மு.க கோரிக்கை

by Staff Writer 27-01-2022 | 5:24 PM
Colombo (News 1st) இந்திய மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விடும் நடவடிக்கையை இந்திய மத்திய அரசாங்கமும் தமிழக மாநில அரசும் இணைந்து தடுக்க வேண்டும் என அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கோரியுள்ளது. தமிழ்நாட்டு மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 105 படகுகளை ஏலத்தில் விட விளம்பரப்படுத்தியிருக்கும் இலங்கை அரசாங்கத்தை கண்டிப்பதாக அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் இந்த செயல் இயற்கை நியதிக்கு எதிரானது எனவும் தமிழக மீனவர்களின் பெயர்களில் உள்ள படகுகளை ஏலம் விடுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் இல்லை எனவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, படகுகளை ஏலத்தில் விட வேண்டாம் என முன்வைக்கப்படும் கோரிக்கை தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஊடகவியலாளர்கள் இன்று வினவினர். இதன்போது, அவை பழுதடைந்த படகுகள் என்பதை சுட்டிக்காட்டிய டக்ளஸ் தேவானந்தா, இட நெருக்கடி, சுகாதார பிரச்சினை காரணமாக அதனை ஏலம் விட முயற்சிப்பதாகக் கூறினார்.