73 ஆவது குடியரசு தினத்தில் போர் வல்லமையை காண்பித்த இந்தியா

73 ஆவது குடியரசு தினத்தில் போர் வல்லமையை காண்பித்த இந்தியா

73 ஆவது குடியரசு தினத்தில் போர் வல்லமையை காண்பித்த இந்தியா

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2022 | 8:10 pm

Colombo (News 1st) பாரதத்தின் 73 ஆவது குடியரசு தினம் இன்றாகும்.

தேசிய குடியரசு தின கொண்டாட்டங்கள் புது டெல்லியில் இன்று (26) நடைபெற்றன.

இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றாலும் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதியே அமுலுக்கு வந்தது. இந்த நாளை குறிக்கும் வகையில் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.

இந்திய தலைநகர் புது டெல்லியில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் பிரதம அதிதியாக எவரும் அழைக்கப்பட்டிருக்கவில்லை.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றி விழாவை ஆரம்பித்து வைத்தார்.

இந்தியாவின் போர் வல்லமையை பிரதிபலிக்கும் வகையில், இராணுவ அணிவகுப்புகள் இடம்பெற்றன. அண்மையில் பிரான்ஸிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட  ரஃபேல் போர் விமானங்களும் வானில் சாகசம் நிகழ்த்தின.

இந்திய விமானப்படை வரலாற்றில் முலாவது ரஃபேல் (Rafale) போர் விமான பெண் விமானியான ஷிவன்கி சிங் உள்ளிட்ட குழுவினர் நிகழ்த்திய விமான சாகசங்கள் விழாவில் கலந்துகொண்டவர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தது.

இதனைத் தவிர இந்திய கடற்படையினரும் தமது சக்தியை குடியரசு தின நிகழ்வின்போது காண்பித்தனர்.

இந்தியாவின் போர் வல்லமை, கலாசார பல்வகைமை மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்தை காண்பிக்கும் அணிவகுப்பு மற்றும் கலை அம்சங்களும் குடியரசு தின விழாவை அலங்கரித்தன.

அண்மையில் தமிழகத்தில் நடைபெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் பிபின் ராவத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

COVID தொற்றுக்கான தடுப்பூசிகளை தயாரித்த சீரம் நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களின் மூன்று அதிகாரிகளுக்கும் பத்ம விபூஷன் விருதுகள் வழங்கப்பட்டன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்