நீதிக்கான அணுகல் செயற்றிட்டம் வவுனியாவில் ஆரம்பம்; சர்வதேச விசாரணையே வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

by Staff Writer 26-01-2022 | 7:33 PM
Colombo (News 1st) நீதி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் நீதிக்கான அணுகல் செயற்றிட்டத்தின் முதலாம் கட்டம் இன்று (26) வவுனியா மாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு, சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்களம், காணாமல் போனவர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கான செயலகம், மத்தியஸ்த்த சபைகள் ஆணைக்குழு, கடன் இணக்க சபை திணைக்களம், மற்றும் குற்றத்தால் பலியானவர்கள் - சாட்சியாளர்களை பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபை ஆகிய நிறுவனங்களின் சேவையை வழங்கும் பொருட்டு நடமாடும் சேவை நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வவுனியா மாவட்ட செயலாளர், நடமாடும் சேவையை முன்னெடுக்கும் நிறுவனங்கள் சார்பிலான அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர். இதனிடையே, வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நீதி அமைச்சின் நீதிக்கான அனுகல் செயற்றிட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா மாவட்ட காணாமலாக்கப்பட்ட உறவினர் சங்கம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டது. பின்னர் இவர்களை தடுப்பதற்கு பொலிஸார் முயற்சி செய்தனர். அதன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மாவட்ட செயலக வளாகத்திற்குள் சென்று எதிர்ப்பில் ஈடுபட்டனர். நீதிஅமைச்சின் அதிகாரியொருவர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.