இலங்கைக்கு வைகோ கண்டனம்

இந்திய மீனவர் படகுகள் ஏலத்தில் விற்பனை: இலங்கைக்கு வைகோ கண்டனம்

by Staff Writer 26-01-2022 | 3:53 PM
Colombo (News 1st) இந்திய மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விற்பனை செய்ய இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் வௌியிட்டுள்ளார். தமிழக மீனவர்கள் தொடர்பில் இலங்கையின் செயற்பாடுகள் குறித்து இந்திய மத்திய அரசு பாராமுகமாக செயற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த 05 ஆண்டுகளாக இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தாம் பல தடவைகள் கோரிக்கை விடுத்ததாகவும் வைகோ வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள கடற்றொழில் சட்டத்தை வாபஸ் பெறுவதற்கு வலியுறுத்துமாறு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசிற்கு எவ்வித அழுத்தங்களையும் இந்திய மத்திய அரசு விடுக்கவில்லை என வைகோ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை கடற்பரப்பிற்குள் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் 105 படகுகளை பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்ய கடற்றொழில் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான மதிப்பீட்டு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்திய மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 65 படகுகள் காரைநகரிலும் 5 படகுகள் காங்கேசன்துறையிலும் கிளிநொச்சி கிராஞ்சியில் 24 படகுகளும் தலைமன்னாரில் 9 படகுகளும் கற்பிட்டியில் 2 படகுகளும் உள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாதத்தின் இரண்டாம் வாரத்தில் இந்திய மீனவர்களின் படகுகள் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன. இதேவேளை, இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (25) அறிவித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.