தொடர்ச்சியான மின் விநியோகத்தில் மீண்டும் சிக்கல்

தொடர்ச்சியான மின் விநியோகத்தில் மீண்டும் சிக்கல்

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2022 | 8:31 pm

Colombo (News 1st) களனிதிஸ்ஸ சொஜிட்ஸ் (Sojitz) தனியார் மின்னுற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிக்கை அத்தியாவசிய திருத்தப் பணிகளுக்காக இன்று (26) முற்பகல் நிறுத்தப்பட்டது.

மின்சார கட்டமைப்பிலுள்ள ஏதேனும் ஒரு மின்னுற்பத்தி நிலையத்தின் விநியோகம் தடைப்பட்டால் மீண்டும் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய நிலை உருவாகும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கம் நேற்று தெரிவித்தது.

எரிவாயு கசிவு காரணமாக களனிதிஸ்ஸ சொஜிட்ஸ் தனியார் மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதன் திருத்தப் பணிகள் பூர்த்தியாக சுமார் ஐந்து நாட்கள் செல்லும் எனவும் மின்சார பொறியியலாளர்கள் கூறுகின்றனர்.

இதனால் தேசிய கட்டமைப்பு 163 மெகாவாட் மின்சாரத்தை இழக்க நேரிட்டுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கை மின்சார சபையின் நிறுவன மூலோபாய மற்றும் ஒழுங்குபடுத்தல் நடவடிக்கை தொடர்பிலான பிரதி பொது முகாமையாளர் கடந்த டிசம்பர் 13 ஆம் திகதி சமர்ப்பித்த இந்த வருடத்திற்கான மின் உற்பத்தி எதிர்வுகூறல் அறிக்கைக்கு அமைய, இந்த மின் உற்பத்தி நிலையத்தில் இந்த வருடத்தில் திருத்தப்பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கவில்லை.

எனினும், எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதால் ஜனவரி மாதம் 22 ஆம் திகதி சுமார் 12 மணித்தியாலங்கள் மின் உற்பத்தி நிலையத்தை செயலிழக்கச் செய்து திருத்தப் பணிகளை மேற்கொள்ள அனுமதியளிக்குமாறு அவர்கள் கட்டமைப்பு கட்டுப்பாட்டு பிரிவிடம் கடந்த 19 ஆம் திகதி கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும், கட்டமைப்பு கட்டுப்பாட்டு பிரிவினர் அதற்கு பதிலளிக்கவில்லை.

பின்னர் கடந்த 21 ஆம் திகதி மீண்டும் வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலையில், அதற்கும் கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் கிடைக்கவில்லை என குறித்த மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்வாகத்தினர் கூறினர்.

இதேவேளை, சப்புகஸ்கந்தை மின் உற்பத்தி நிலையத்தில் செயலிழந்த மின் பிறப்பாக்கி இதுவரை இயங்கவில்லை.

இந்த மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான எண்ணெய்யை பெற்றுக்கொள்வதில் எழுந்துள்ள சிக்கல் நிலையே அதற்கு காரணமாகும்.

பவுசர்கள் ஊடாக குறித்த மின் உற்பத்தி நிலையத்திற்கு எண்ணெய் விநியோகிக்கப்படுவதாக மின்சார சபை தெரிவித்தது.

இதற்கமைய, இந்த மின்னுற்பத்தி நிலையத்தை இன்றிரவு தேசிய கட்டமைப்புடன் இணைப்பதற்கு மின்சார சபை முயற்சித்து வருகிறது.

மின்சார பொறியியலாளர்கள் நேற்று தெரிவித்தமைக்கு அமைய, இந்த இரண்டு மின் உற்பத்தி நிலையங்களும் இயங்காமை தொடர்ச்சியான மின் விநியோகத்திற்கு இடையூறாக அமையாதா?

எம்மிடமுள்ள மொத்த மின் உற்பத்தி அளவு 2,680 மெகாவாட்களாகும். இரவு வேளையில் பொதுவாக 2600 தொடக்கம் 2650 மெகாவாட்களுக்கான கேள்வி நிலவும். எம்மிடம் உள்ள மொத்த மின்சார அளவு 2,680 மெகாவாட் என்பதால், திடீரென கோளாறுகள் ஏற்படும்போது அதனை வழமைக்கு கொண்டுவரும் வரை இரவு வேளையில் சிறிதளவு மின்வெட்டை அமுல்படுத்த நேரிடும்

என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் குழு உறுப்பினர் எரங்க குடாஹேவா நேற்று குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், மின்வெட்டு இல்லாமல் மின்சார விநியோகத்தை தொடர்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக இன்று கடமைகளை பொறுப்பேற்ற மின்சார சபையின் புதிய பொது முகாமையாளர் கூறினார்.

இதேவேளை, மின்சார சபையின் நிர்வாகம் தொடர்பிலும் தற்போது பல சிக்கல்கள் உருவாகியுள்ளன.

மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தொடர்ச்சியாக முன்வைத்து வந்த கோரிக்கைக்கான தீர்வாக பதில் பொது முகாமையாளராக நியமிக்கப்பட்டிருந்த கலாநிதி சுசந்த பெரேரா அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு கலாநிதி ரோஹாந்த அபேசேகரவிற்கு அந்த பதவிக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமையவே பணிப்பாளர் சபை தம்மை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளதாக முன்னாள் பொது முகாமையாளர் கலாநிதி சுசந்த பெரேரா தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை மின்சார சபையின் தலைவர் M.M.C. பெர்டினாண்டோ பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்து பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

தனிப்பட்ட காரணத்திற்காக இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவரது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்