பல பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களுக்கு COVID தொற்று

பல பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களுக்கு COVID தொற்று

by Staff Writer 25-01-2022 | 11:39 PM
நாடளாவிய ரீதியில் உள்ள பல பாடசாலைகளின் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் COVID தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. COVID நோயாளர்களை அடையாளம் காண்பதற்கும் தற்போதைய நிலைமையின் கீழ் செயற்படுவதற்கும் தேவையான சுகாதார ஆலோசனைகளை சுகாதார அமைச்சிடம் பெற்றுக்கொள்ளவதற்கு எண்ணியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. COVID தொற்று ஏற்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்ற சிறுவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார். சிகிச்சை நிலையங்களில் உள்ள 5,758 கட்டில்களும் தீவிர கண்காணிப்புப் பிரிவுகளில் உள்ள 62 கட்டில்களும் தற்போது பயன்படுத்தப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் கூறினார். நேற்றும் 14 கொவிட் மரணங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த மரணங்கள் நேற்று முன்தினம் பதிவானவை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டது. இதற்கமைய, இலங்கையில் COVID தொற்றினால் இதுவரை 15 ,313 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஐந்து நாட்களை கவனத்திற்கொள்ளும்போது நாளாந்தம் கண்டறியப்படுகின்ற நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 20 ஆம் திகதி 8242  PCR பரிசோதனைகளில் 827 பேருக்கு COVID தொற்று உறுதியானது. 21 ஆம் திகதி பதிவான COVID நோயாளர்களின் எண்ணிக்கை 840 ஆகும். அன்றைய தினத்தில் 8716 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. 22 ஆம் திகதி நடத்தப்பட்ட 7501 PCR பரிசோதனைகளில் 845 COVID நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். 23 ஆம் திகதி 6774 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதன்போது 838 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 8383 PCR பரிசோதனைகள் நேற்று நடத்தப்பட்டுள்ளதுடன், இதன்போது 877 பேருக்கு COVID தொற்று அடையாளம் காணப்பட்டது. குறித்த ஐந்து நாட்களில் மாத்திரம் 70 COVID நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர். சுகாதார அதிகாரிகளின் வேண்டுகோள்   இதனிடையே, கொழும்பு நகரின் பல இடங்களில் பொலிஸாரால் பயணிகள் பஸ்கள் இன்று பரிசோதிக்கப்பட்டன. சுகாதார நடைமுறைகளுக்கு அமைய போக்குவரத்து இடம்பெறுவதை கண்காணிக்கும் பொருட்டு இந்த பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

ஏனைய செய்திகள்