55 இந்திய மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டிருந்த 55 இந்திய மீனவர்கள் விடுதலை

by Staff Writer 25-01-2022 | 11:50 PM
இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டிருந்த 55 இந்திய மீனவர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்து விடுதலை செய்வதற்கான உத்தரவினை ஊர்காவற்றுறை நீதிமன்றம் பிறப்பித்தது. இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் கஜநிதி பாலன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இலங்கை கடலில் கைப்பற்றப்பட்ட 8 படகுகளில் இருந்த 55 இந்திய மீனவர்களுக்கு எதிரான இந்த வழக்கில் மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. வௌிநாட்டுப் படகுகளை சட்ட அனுமதிப்பத்திரமின்றி இலங்கை கடற்பரப்பிற்குள் செலுத்தியமை, இலங்கை கடலில் படகுகள் தடுத்து நிறுத்தப்படும் வரை மீன்பிடி உபகரணங்களை தொடர்பறுக்காமல் வைத்திருந்தமை மற்றும் இழுவை மடி முறையை பயன்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தன. இந்த மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் குற்றவாளிகளாக காணப்பட்ட 55 மீனவர்களுக்கும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 6 மாத சாதாரண சிறைதண்டனை விதித்து, அதனை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. கைது செய்யப்பட்ட மீனவர்களில் ஒருவரான செல்வன் செட்டி பிரதீபன் என்பவர் படகு உரிமையாளர்களில் ஒருவர் என்பதால், அவரது படகை அரசுடைமையாக்குவதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ஏனைய ஏழு படகுகளின் உரிமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அன்றைய தினத்தில் மன்றில் ஆஜராகி படகுகள் இலங்கை கடற்பரப்பிற்குள் செலுத்தப்பட்டமைக்கான விளக்கத்தை அளிக்குமாறு படகு உரிமையாளர்களுக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த படகுகளை நீரியல்வள திணைக்களம் கடற்படையினர் ஊடாக பராமரிப்பதால் படகுகளை விடுவிக்கும்போது உரிய பராமரிப்பு கட்டணத்தை படகு உரிமையாளர்கள் செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த 55 மீனவர்களுடன் கைது செய்யப்பட்ட சிறுவன் அடங்கலாக 56 பேரையும் இந்தியாவிற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்திய மீனவர்கள் சார்பில் சட்டத்தரணி கே.ஏ.அருள் நிலோஷன் ஆஜராகியிருந்ததுடன், நீரியல்வளத்துறை அதிகாரிகளுடன் அரச சட்டவாதி நிஷாந்த் நாகரட்ணம் மன்றில் ஆஜராகியிருந்தார். இதனிடையே, இந்திய மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஏல விற்பனைக்கு விடும் தீர்மானத்தை மனிதாபிமான அடிப்படையில் மீள் பரிசீலனை செய்யுமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமான் கடற்றொழில் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய மீனவர்கள் மீன்பிடிக்கும் நோக்கத்தில் மட்டுமே கடற்பரப்பிற்குள் வருவதாகவும் அவர்கள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை எனவும் செந்தில் தொண்டமான் கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஏலத்தில் விடும் பொழுது இந்திய மீனவ சமூகத்தினர் மேலும் வாழ்வாதார நெருக்கடிக்குள் தள்ளப்படக்கூடிய சூழல் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்திய மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் ஏலத்தில் விடப்படவுள்ள நிலையில் அதனை மதிப்பீடு செய்வதற்காக அதிகாரிகள் இன்று கிளிநொச்சிக்கு சென்றிருந்தனர். மதிப்பீடு செய்யும் குழுவினர், கிளிநொச்சி கிராஞ்சிக்கு சென்று இந்தியப் படகுகளை பார்வையிட்டனர். கடற்றொழில் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட உதவி பணிப்பாளர்,கொழும்பு மதீப்பிடு திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் இந்த குழுவில் இடம்பெற்றிருந்தனர்.