25 ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு அவசியமில்லை

25 ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு அவசியமில்லை: மின்சக்தி அமைச்சர்

by Staff Writer 22-01-2022 | 3:43 PM
Colombo (News 1st) எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கான அவசியம் இல்லை என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருள் உள்ளதாகவும் அவர் கூறினார். இதனிடையே, நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி நிலையத்தில் செயலிழந்துள்ள மின் பிறப்பாக்கியை எதிர்வரும் 25 ஆம் திகதிக்குள் சீர்செய்ய முடியும் என அவர் நம்பிக்கை வௌியிட்டார். அதன் பின்னரும் தொடர்சியான மின்சார விநியோகத்தை வழங்க எதிர்பார்ப்பதாக மின்சக்தி அமைச்சர் கூறினார். களனிதிஸ்ஸ, சப்புகஸ்கந்த மற்றும் துறைமுகத்திலுள்ள மிதக்கும் மின்னுற்பத்தி நிலையம் ஆகியவற்றில் மின்னுற்பத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதால், தற்போது பற்றாக்குறையாகவுள்ள 200 மெகாவாட் மின்சாரத்தை இந்த மின்னுற்பத்தி நிலையங்களூடாக பெற்றுக்கொள்வதாகவும் அமைச்சர் காமினி லொக்குகே சுட்டிக்காட்டினார். மின்சார பாவனையாளர்கள் தங்களின் தாமத கொடுப்பனவுகளை தற்போது செலுத்த ஆரம்பித்துள்ளதால், அடுத்த வாரமளவில், பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு 15 பில்லியன் ரூபா பணத்தை வழங்க எதிர்பார்ப்பதாகவும் மின்சக்தி அமைச்சர் தெரிவித்தார். நீர் மின்னுற்பத்தியை அதிகரிப்பது தொடர்பில் மகாவலி அதிகார சபையுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார். இந்நிலையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை உரிய மழைவீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.