மிருகக்காட்சி சாலை பணிப்பாளர் தற்காலிக பணி விலகல்

தேசிய மிருகக்காட்சி சாலை திணைக்கள பணிப்பாளர் நாயகம் 14 நாட்களுக்கு பணி விலகல்

by Staff Writer 22-01-2022 | 4:38 PM
Colombo (News 1st) 14 நாட்கள் பணியிலிருந்து விலகுவதாக தேசிய மிருகக்காட்சி சாலை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஷர்மிளா ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாசகார செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பில் உரிய விசாரணைகள் ஆரம்பிக்கப்படாவிடின், 14 நாட்களின் பின்னர் பதவியை இராஜினாமா செய்யவும் தயாராகவுள்ளதாக அவர் கூறியுள்ளார். பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ளும் ஊழியர்களால் மிருகக்காட்சி சாலையிலுள்ள விலங்குகளுக்கு மாத்திரமின்றி, அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஷர்மிளா ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். மிருகங்களை வேறு கூடுகளில் மாற்றிவிடுவதும் மின் இணைப்புகளை மாற்றுவதுமாக பல்வேறு நாசகார செயற்பாடுகளில் குறித்த தொழிற்சங்கத்தினர் ஈடுபடுவதாக தேசிய மிருகக்காட்சி சாலை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். தங்களின் மோசடி செயற்பாடுகளை மறைப்பதற்காக பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டு, திணைக்களத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால், மிருகங்கள் மற்றும் ஊழியர்களின் உயிர்களை பணயமாக வைத்து , தொழிலை முன்னெடுக்க முடியாது என துறைசார் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும், உரிய விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் வரை பணியிலிருந்து விலகுவதாகவும் தேசிய மிருகக்காட்சி சாலை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஷர்மிளா ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.