தமிழக மீனவர்களின் படகுகளுக்கு இழப்பீடு

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளுக்கு இழப்பீடு

by Bella Dalima 22-01-2022 | 10:24 PM
Colombo (News 1st) இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளுக்கு இழப்பீடு வழங்கவுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 108 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா 05 இலட்சம் இந்திய ரூபாவும் 17 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ஒன்றரை இலட்சம் இந்திய ரூபாவும் இழப்பீடாக வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது. தமிழக மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்ததன் பின்னரே தமிழக முதல்வர் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார். இலங்கையில் கைப்பற்றப்பட்டு, தற்போது பயன்படுத்த முடியாத நிலையிலுள்ள 125 படகுகளின் உரிமையாளர்களுக்கே இழப்பீடு வழங்கவுள்ளதாக தமிழக முதல்வர் கூறியுள்ளார். இலங்கையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, மீனவர் சங்க பிரதிநிதிகள் மாநில முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் கடிதம் மூலமும் தொலைபேசி கலந்துரையாடல் மூலமும் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் மீனவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தௌிவுபடுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, தமிழக முதலமைச்சரின் நடவடிக்கைகளுக்கு மீனவர்கள் தங்களின் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.