கைக்குண்டு விவகாரம்: தேடப்பட்ட ரனாலே ருவன் கைது

கைக்குண்டு விவகாரம்: தேடப்பட்ட ரனாலே ருவன் கைது

by Staff Writer 21-01-2022 | 3:23 PM
Colombo (News 1st) பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்திலிருந்து மீட்கப்பட்ட கைக்குண்டை வழங்கியதாகக் கூறப்படும் ரனாலே ருவன் எனும் நபர் ஹம்பாந்தோட்டை - ரன்ன பகுதியில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வைத்தியர் வழங்கிய தகவலுக்மைய சந்தேகநபர் நேற்று (20) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பிலியந்தலையில் கைது செய்யப்பட்டுள்ள வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய அந்த கைக்குண்டு தேவாலயத்தில் வைக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். கைது செய்யப்பட்டு கொழும்புத் துறைமுக பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரால் கைக்குண்டு தேவாலயத்தில் வைக்கப்பட்டமை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் இதுவரை முன்னெடுத்த விசாரணைகளூடாக தெரியவந்துள்ளது. பனாமுரே பகுதியை சேர்ந்த 65 வயதான சந்தேகநபரே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட நாளில் அந்த நபர் காலை வேளையில் தேவாலயத்திற்கு சென்றுள்ளமை பாதுகாப்பு கெமராக்களில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டுள்ள 75 வயதான சந்தேகநபரின் ஆலோசனைக்கு அமையவே, பெல்லன்வில விகாரை மற்றும் லங்கா ஹொஸ்பிட்டல் ஆகிய இடங்களிலும், கைக்குண்டுகள் வைக்கப்பட்டதாக விசாரணைகளூடாக தெரியவந்துள்ளது. மனைவியின் மரணத்தினால் ஏற்பட்ட மன உளைச்சலால் இவ்வாறான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட பின்னர் மருத்துவரின் மகனும் சமூக ஊடக மற்றும் அரசியல் செயற்பாட்டாளருமான ஓஷல ஹேரத் நேற்று முன்தினம் ஊடக சந்திப்பை நடத்தி, குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் தேவாலயத்தின் ஊழியர்கள் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். காலை வேளையில் பதிவாகியுள்ள CCTV காட்சிகளைக் கூட விசாரணைக்கு பயன்படுத்தாத பொலிஸார், தேவாலயத்தின் ஊழியர்களைக் கைது செய்ததாக, கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை ஊடக சந்திப்பொன்றை நடத்தி தெரிவித்திருந்தார். சந்தேகநபரின் காட்சிகளையும் பேராயர் வௌிப்படுத்தினார். தற்போது அந்தக் காட்சிகளையும் பயன்படுத்தி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.