ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு எதிரான வழக்கு விசாரணை 

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் பிணை கோரிக்கைக்கு எதிர்ப்பில்லை: சட்ட மா அதிபர் அறிவிப்பு

by Bella Dalima 20-01-2022 | 5:58 PM
Colombo (News 1st) பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்காக மேல் நீதிமன்றத்தில் பிணை கோரப்படுவதற்கு தமது தரப்பில் எதிர்ப்புகள் இல்லை என சட்ட மா அதிபரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்டது. தம்மை பிணையில் விடுவிக்குமாறு கோரி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தாக்கல் செய்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்வா இதனை தெரிவித்தார். மேனகா விஜேசுந்தர மற்றும் நீல் இத்தவெல ஆகியோரடங்கிய மேன்முறையீட்டு நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக சட்டமா அதிபரால் புத்தளம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, இம்மாதம் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மன்றில் தெரிவித்தார். அதன்போது, பிணை கோரிக்கை முன்வைக்கப்பட்டால் அதற்கு சட்ட மா அதிபர் எதிர்ப்பில்லை எனவும் அவர் மன்றில் சுட்டிக்காட்டினார். சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, புத்தளத்திலுள்ள மதரஸா ஒன்றில் மாணவர்களுக்கு அடிப்படைவாதத்தை போதித்த குற்றச்சாட்டில் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். 18 மாதங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட பின்னர் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் புத்தளம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு அமைவாக, பிணை வழங்குமாறு அவரது சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் 15 ஆம் சரத்தின் (2) ஆம் பிரிவின் கீழ் பிணை வழங்கும் அதிகாரம், தமது நீதிமன்றத்திற்கு இல்லையென தெரிவித்து புத்தளம் மேல் நீதிமன்றத்தினால் கடந்த வருடம் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், மேல் நீதிமன்றத்தின் உத்தரவை செல்லுபடியற்றதாக்கி அவருக்கு பொருத்தமான பிணையை வழங்குமாறு மனுவில் கோரப்பட்டிருந்தது.