பூஜித் ஜயசுந்தரவின் விடுதலை தொடர்பான தீர்மானம் பெப்ரவரி 18 ஆம் திகதி

by Bella Dalima 20-01-2022 | 4:15 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு அமைவாக சட்டமா அதிபரால் தொடரப்பட்டுள்ள வழக்கில், முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை சாட்சி விசாரணையின்றி விடுதலை செய்வதா, இல்லையா என்பது தொடர்பான தீர்மானத்தை அடுத்த மாதம் 18 ஆம் திகதி அறிவிக்க மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று (20) தீர்மானித்தது. தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சாட்சிகள் மற்றும் ஆவணங்களுக்கு அமைவாக, முறைப்பாட்டாளர் சாட்சி விசாரணையை இன்றுடன் நிறைவு செய்வதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மன்றில் தெரிவித்தார். முறைப்பாட்டாளர் சார்பில் 04 சாட்சியாளர்கள் சாட்சிகளை சமர்ப்பித்துள்ளதுடன், 759 ஆவணங்களும் முன்வைக்கப்பட்டன. இந்த வழக்கு நாமல் பலல்லே, ஆதித்ய பட்டபெதிகே மற்றும் மொஹமட் இஸர்டீன் ஆகியோர் அடங்கிய விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.